மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஆண்டு
தோறும் "பிளக்ஸ் பேனர்" வைத்து, மாணவர்களை அழைக்கிறது, அரசூரில் உள்ள
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.
கோவை மாவட்டம், சூலூரை அடுத்த
தென்னம்பாளையத்தில், அரசூர் ஊராட்சி துவக்க பள்ளி சார்பில் வைக்கப்பட்டுள்ள
இந்த பேனர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. "அரசு பள்ளியில் சேர்ந்து
படித்தால், புத்தகங்கள், நோட்டுகள், பஸ் பாஸ் மற்றும் சீருடைகள் இலவசமாக
அரசால் வழங்கப்படுகின்றன. பள்ளியில் சனி, ஞாயிறு அன்று மாணவர்களின்
தனித்திறமையை வளர்க்கும் விதத்தில் கராத்தே, நடனம் மற்றும் யோகா
கற்றுத்தரப்படும்..." என்பது உள்ளிட்ட வாசகங்கள் பேனரில் உள்ளன.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் கூறியதாவது: எங்கள்
பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, இது போன்று பேனர்களை கடந்த சில
ஆண்டுகளாக வைத்து வருகிறோம். தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களுக்கு
பாடம் கற்பிப்பது மட்டுமல்லாமல், மாணவர்களின் தனித்திறமையை அறிந்து, பொம்மை
தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.
எங்கள் துவக்கப்பள்ளியில் தனியாக நூலகம் அமைத்து, மாணவர்களின்
வாசிக்கும் திறனை வளர்த்து வருகிறோம்.படிக்க வசதியற்ற மாணவர்களை
கண்டறிந்து, தனியார் தொழில் நிறுவனங்களிடம் கல்வி ஊக்கத்தொகை பெற்று
தருகிறோம்.
சேமிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், சிறுசேமிப்பு திட்டத்தை
செயல்படுத்துகிறோம். நாட்குறிப்பு எழுதுதல், ஐ.டி., கார்டு அணியும்
பழக்கத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தி உள்ளோம். ஆங்கிலம் எழுதவும்,
படிக்கவும் தனி பயிற்சி அளிக்கிறோம். ஆசிரியைகளின் ஒத்துழைப்போடு, அரசின்
திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.