கடந்த ஆண்டு நடந்த, 2 டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ்
சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய
தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து,
டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்படி, செப்., 6, 7 ஆகிய தேதிகளில்,
சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டி.ஆர்.பி., தலைவர்,
விபு நய்யார் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஆண்டு, ஜூலை, 12 மற்றும்
அக்டோபர், 14 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதற்கான
சான்றிதழ் சரிபார்ப்பு, முறையே, கடந்த ஆண்டு, செப்., 7, 8 மற்றும் நவம்பர்,
6 முதல் 9ம் தேதி வரை நடந்தன.
இதில் பங்கேற்காத தேர்வர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று,
உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்களுக்கு, மீண்டும் ஒரு இறுதி
வாய்ப்பு வழங்கும் வகையில், வரும், செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ்
சரிபார்ப்பு நடத்தப்படும். இந்நிகழ்வு, சென்னை, அசோக்நகர் அரசு மகளிர்
மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படும்.
கடந்த ஆண்டு, நவம்பர், 9ம் தேதி அன்று, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்
பணிக்கு, உரிய முழுமையான கல்வித்தகுதியை பெற்றிருந்து, உரிய பட்டயச்
சான்று, பட்டச் சான்று, மதிப்பீட்டிற்கான சான்று மற்றும் மதிப்பெண்
பட்டியல் போன்றவற்றை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு மட்டும், இந்த வாய்ப்பு
வழங்கப்படுகிறது.
ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஆவணங்கள் அடிப்படையில்,
சம்பந்தப்பட்ட தேர்வர்களின் பதிவு எண்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில்
வெளியிடப்பட்டு உள்ளன. கடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளில்,
தேர்ச்சிக்குரிய, குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று, சான்றிதழ்களை
சமர்ப்பிக்கத் தவறியவர்களின் விவரங்கள், இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.
தேர்வர்கள், பதிவு எண்களை சரிபார்த்து, அதில் அழைக்கப்பட்டுள்ளவர்கள்
மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். தற்காலிக அடிப்படையில்
தான், தேர்வர், அழைக்கப்படுகின்றனர். பெயர் விடுபட்டு இருந்தால்,
டி.ஆர்.பி., தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, விபு நய்யார்
தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகே, பல
தேர்வர்களுக்கு, சான்றிதழ்கள் கிடைத்தன. அவர்கள், அப்போதைய டி.ஆர்.பி.,
தலைவர், சுர்ஜித் சவுத்ரியிடம், பல முறை முறையிட்டும், அவர், தேர்வர்களின்
கோரிக்கைகளை ஏற்கவில்லை. இதனால், வேலை வாய்ப்பை பெறும் நிலையில் இருந்த
பலர், சான்றிதழ் இல்லாததன் காரணமாக, வேலை வாய்ப்பை இழந்தனர். பல பெண்கள்,
கண்ணீர் விட்டு கதறினர். எனினும், தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள்,
கடைசிவரை பரிசீலிக்கப்படவில்லை.
இந்நிலையில், எட்டு மாதங்களுக்குப்பின், டி.ஆர்.பி.,யின் புதிய தலைவராக
பதவி ஏற்ற குறுகிய நாட்களிலேயே, தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, விபு
நய்யார், வாய்ப்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம்,
தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி
உள்ளது.