அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் சம்பளம் குறைக்க வேண்டாம் : அரசு புது உத்தரவு!

தமிழகத்தில், ஆறாவது ஊதியக் குழுவில் இருந்த, முரண்பாடுகளைக் களைந்து, அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில், புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர், தாசில்தார், உதவிப் பொறியாளர் உட்பட, பலரின் சம்பளம் குறைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதால், "இம்மாதம் சம்பளம் குறைப்பு செய்ய வேண்டாம்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.


மத்திய அரசின், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்தபடி, 2009ல், தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில், பல குறைபாடு இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும், அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.


அறிக்கை:
இதுகுறித்து விசாரிக்க, கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், அரசு செலவினத் துறை முதன்மை செயலர் கிருஷ்ணன் தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டது. குழுவினர், பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் மற்றும் சங்கங்களிடம், கருத்து கேட்டனர். அதன் அடிப்படையில், அரசுக்கு அறிக்கை சமர்பித்தனர்.
அரசாணை வெளியீடு:
குழு அறிக்கை அடிப்படையில், கடந்த மாதம், 22ம் தேதி, துறை வாரியாக, புதிய அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம், அரசு ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு, 200 ரூபாயில் இருந்து 3,000 ரூபாய் வரை, ஊதிய உயர்வு கிடைத்துள்ளது.அதேநேரம், இன்ஸ்பெக்டர், தாசில்தார், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் உட்பட பலருக்கு, சம்பளம் குறைக்கப்பட்டது. "புதிய சம்பளம், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.
தடை:
சம்பளம் குறைக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களில் சிலர், கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றனர். அதைத் தொடர்ந்து, "இம்மாதம் பழைய சம்பளம் வழங்க வேண்டும்; சம்பளத்தை குறைக்கக் கூடாது' என, துறை அதிகாரிகள் மூலம், கருவூலத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். கருவூலத் துறை அதிகாரிகள், "கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றவர்களுக்கு மட்டும், அதே சம்பளம் வழங்கப்படும். மற்றவர்களுக்கு சம்பளம் குறைத்து வழங்கப்படும்' என, தெரிவித்தனர். இதனால், ஊழியர்களிடம் குழப்பம் ஏற்பட்டது. இவ்விவரத்தை, உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, கோர்ட் தடை உத்தரவு காரணமாக, சம்பளம் குறைக்கப்பட்டவர்களுக்கு, பழைய சம்பளத்தையே, இம்மாதம் வழங்க வேண்டும் என, நேற்று, அரசாணை வெளியிடப்பட்டது. புதிய அரசாணை, அனைத்து கருவூலத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
 நன்றி : தினமலர்

Popular Posts