தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை வசதி உள்ளதை உறுதிசெய்ய போட்டோ ஆதாரத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
'துாய்மையான இந்தியா- துாய்மையான தமிழகம்' திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வீடுகளில் கழிப்பறை பயன்பாடு உள்ளதா என்பதை உறுதி செய்து ஆதாரத்துடன் சான்றளிக்க அவர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆசிரியர் அல்லது அரசு ஊழியர்கள் போட்டோ, வீட்டு கழிப்பறை போட்டோ, முகவரி, குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகிய தகவல்களுடன், 'எனது வீட்டில் கழிப்பறை வசதி உள்ளது. அதை அனைவரும் பயன்படுத்துகிறோம்' என்ற கையெழுத்திட்ட உறுதிமொழி படிவத்துடன், கழிப்பறை போட்டோவையும் இணைத்து அந்தந்த துறை அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன், மதுரை செயலாளர் முருகன் கூறியதாவது:சுத்தம், சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்த உத்தரவில் கழிப்பறையை போட்டோ ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்கு ஆசிரியைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிபந்தனையை வாபஸ் பெற வேண்டும்.'மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்' என்று கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இன்னும் பல அரசு பள்ளிகளில் அந்த வசதி இல்லை. கழிப்பறை இருந்தாலும் தண்ணீர் வசதி இல்லாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்த அரசு ஆர்வம் காட்ட வேண்டும் என்றனர்.