அரசு தொடர்பான அடிப்படை தேவைகளுக்கான விண்ணப்பங்களுடன், சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்கும்போது, அதிகாரிகளின், 'அட்டஸ்டேஷன்' தேவையில்லை; சுய ஒப்புகை மட்டுமே போதுமானது' என,மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுத் துறை சார்ந்த பணிகள், வேலைவாய்ப்பு, கல்வி, உள்ளிட்ட முக்கிய விண்ணப்பங்களுடன், நகல் சான்றிதழ்களை அனுப்பும் போது, அதில், 'நோட்டரி பப்ளிக்' அல்லது பச்சை மை உபயோகப்படுத்தும், தகுதியுள்ள அதிகாரிகளிடம், 'அட்டஸ்டேஷன்' கையெழுத்து பெற்று அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. இதற்கு, பண விரயம் மட்டுமின்றி, நேர விரயமும் ஆவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
'விண்ணப்பங்களுடன் பொதுமக்கள் அனுப்பும் நகல்களில், தாங்களே கையொப்பம் இட்டு அனுப்பினால் போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அசல் சான்றிதழ் காண்பிக்க வேண்டும்' என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.