கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல், இரண்டாண்டு படிப்பாக மாற்றப்படுவது உறுதியாகி உள்ளதால், நடப்பாண்டு, பி.எட்., படிப்பிற்கு கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் படிப்புகளில் ஒன்றான, பி.எட்., பட்டப்படிப்பு, ஓராண்டு படிப்பாக இருந்து வருகிறது. மத்திய அரசால், பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறன், கல்வியால் பெற்ற அவர்களின் அறிவுத்திறன் ஆகியவை, நுண்ணிய ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில், தமிழக மாணவர்களின் அறிவுத்திறன் மிக குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.எனவே, கல்வி கற்பித்துத் தரும் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்காக, பி.எட்., படிப்பை, அடுத்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்கான, சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த கல்வியாண்டு முதல், இது நடைமுறைப் படுத்தப்படுவது உறுதியாகி உள்ளது.
இதனால், இந்த கல்வியாண்டு மட்டும் தான், ஓராண்டு கொண்ட பி.எட்., படிப்பு நடைமுறையில் இருக்கும். படிப்பு செலவினங்கள், கால விரயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பி.எட்., படிப்பிற்கு, இந்த கல்வியாண்டில், கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக, வெறிச்சோடிய பல கல்வியியல் கல்லுாரிகளிலும், தற்போது மாணவ, மாணவியரின் கூட்டம் அலை மோதுகிறது.