கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மே 30-ம் தேதி மனு அளிப்பது என வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராக. ராமு தலைமை வகித்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் ஆசிரியர் நியமன நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு என்பதை சிறப்பு அரசாணை மூலம் அறிவித்து உடன் பணி வழங்க வேண்டும்.
மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் பழைய விதிமுறைகளின்படி 2001-க்கு முன்பு ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30-ம் தேதி முதல்வரைச் சந்தித்து மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ், பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் என்.கே. சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் அரிகிருஷ்ணன் வரவேற்றார்.
அரியலூர் மாவட்டத் தலைவர் இளவரசன் நன்றி கூறினார்