"கல்வி உதவித் தொகை பெறும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினரின் ஆண்டு வருவாய் வரம்பு, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்" என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர்களுக்கான, 68 விடுதிகளுக்கு, நடப்பாண்டில் சொந்த கட்டடங்கள், 87 கோடி ரூபாயில் கட்டப்படும். இதில், 47 விடுதிகள், 100 மாணவர்கள் தங்கும் வகையிலும், 21 விடுதிகள், 50 மாணவர்கள் தங்கும் வகையிலும் கட்டப்படும்.
இவற்றில், சூரிய மின் உற்பத்தியும் அமைக்கப்படும். மேலும், ஐந்து பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள், மூன்று மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள், ஒரு சீர் மரபினர் விடுதிகள், 2.50 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்படும். 767 விடுதிகளைப் பராமரிக்க, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், கல்வி உதவித் தொகை பெற, ஆண்டு வருவாய், 1 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த வரம்பு, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
இந்த இனத்தைச் சேர்ந்த விவசாயிகள், ஆழ்துளை கிணறுகள் அமைக்க, 50 சதவீத மானியம் அளிக்கப்படும். இதன் மூலம், 785 விவசாயிகளுக்கு, 3.84 கோடி ரூபாய் வழங்கப்படும். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துக்கு, சென்னை, எழும்பூரில், 4.27 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று கிரவுண்டு நிலம் கிரயமின்றி அளிக்கப்படும். இந்த நிலத்தில், 4 கோடி ரூபாயில், அலுவலகக் கட்டடம் கட்டப்படும். இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.