அமைச்சர்கள் மீது பண மழை: குஜராத்தில் பரபரப்பு



ஆமதாபாத்,: குஜராத்தில் தொண்டு நிறுவனத்தினர் நடத்திய விழாவில், அமைச்சர்கள் மீது பண மழை பொழிய வைக்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.குஜராத் மாநிலம், ஜுனாகர் பகுதியில், தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, கோசாலை அமைத்து, பசுக்களை பாதுகாத்து வருகிறது. இந்த அமைப்பின் சார்பில், கடந்த சனிக்கிழமை, விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், மாநில உள்துறை அமைச்சர், ரஜினிகாந்த் படேல், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், கோவிந்த்பாய் படேல், மாநில பா.ஜ., தலைவர், ஆர்.சி.பல்து மற்றும் பல பிரபலங்களும், செல்வந்தர்களும் கலந்து கொண்டனர்.விழா நிறைவில், அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பா.ஜ., தொண்டர்கள், 1,000 ரூபாய் நோட்டுகளை, அமைச்சர்களின் மீது மழையாய் பொழிந்தனர். "ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசுவது சட்டப்படி குற்றம்' என்பதை அறியாத மாநில அமைச்சர்கள், தங்கள் மீது பண மழை பொழிய வைக்கப்பட்டதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர்.அத்துடன், கோசாலையை நடத்தி வரும், தொண்டு நிறுவனத்திற்கு, தங்கள் பங்களிப்பாக பெரும் தொகையை நன்கொடையாக வழங்கினர். அமைச்சர்களைப் பார்த்து, அவர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த, முக்கிய பிரமுகர்களும், செல்வந்தர்களும், தங்கள் பங்கிற்கு, கணிசமான தொகையை வழங்கினர். இதனால், சில நிமிடங்களில், தொண்டு நிறுவனத்திற்கு, 1 கோடி ரூபாய்க்கு மேல், நன்கொடை கிடைத்தது.குஜராத் மாநிலத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Posts