"அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துவதற்காக, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில், மே மாதம் பள்ளிக்கு வரவேண்டும்" என, நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில், மே மாதம் முதல் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று, அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்த வேண்டும்.
பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில் பயிலுவதன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்த எடுத்துக் கூற வேண்டும் என, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிக்கப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட உள்ள இத்திட்டம், பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதே வேளையில் மே மாதம் பி.எட்., உள்ளிட்ட உயர் கல்வி தேர்வுகள் வருவதால், அவற்றை படிக்கும் ஆசிரியர்களின் கல்வி பாதிக்கும் எனவும், ஆசிரியர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: மே மாதம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில் பள்ளிக்கு வரவேண்டும் என, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலரும் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி பள்ளிக்கு செல்லும் ஆசிரியர், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கும் சலுகை விவரம் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில், மே மாதம் உயர்கல்வி தேர்வு உள்ளிட்டவை இருக்கும். உயர்கல்வி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு மே மாதம் பணி இருந்தால், அவர்களது கல்வி பாதிக்கும். எனவே, உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கு இதில் விதி விலக்கு அளிக்க வேண்டும். அல்லது மே மாத இறுதியில் இத்திட்டத்தை செயல்படுத்தினால், எவ்வித பிரச்னையும் இருக்காது, என்றனர்.