மொத்தமாக எஸ்.எம்.எஸ்., யார் யாருக்கு சலுகை


மொத்தமாக, அதிக எண்ணிக்கையில், எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., செய்திகளை அனுப்புவதை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதில், யார் யாருக்கு விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து, முடிவெடுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.வதந்தி, தீ போல பரவக் கூடியது.
ஒருவர், பத்து ரூபாயைத் திருடி விட்டாராம் என பரப்பப்படும் வதந்தி, பத்தாவது நபரைச் சென்றடையும்போது, பத்து கோடி ரூபாயாக மாறியிருக்கும்; அந்த அளவுக்கு, "வதந்தீ' கொடூரமானது.உண்மையான, நல்ல, நட்புறவான தகவல்களை, ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள, அருமையான ஊடங்களாக இருக்கும், மொபைல் போனின், எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., கலவரங்களை ஏற்படுத்தி விட்டன என்பது, சமீப கால உண்மை.வட கிழக்கு மாநிலங்களில் நடந்த சம்பவங்களை, ஒரு தரப்பினர், தவறாக புரிந்து கொண்டு, வதந்தியை பரப்பும் விதத்தில் அனுப்பிய, எஸ்.எம்.எஸ்., செய்திகளால், நாட்டின் பல பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வந்த, வட கிழக்கு மாநிலத்தவர் ஏராளமானோர், ஆகஸ்டில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர்.
சொந்த நாட்டிலேயே அகதிகள் போல ஆக்கப்பட்ட, அவர்களை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முயன்றும் முடியவில்லை.அதையடுத்து, மொத்தமாக, அதிக எண்ணிக்கையில் (பல்க்), எஸ்.எம்.எஸ்., செய்திகளை அனுப்ப, மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது; நிலைமையும் சில நாட்களில் சீரானது.
ஆனால்,"பல்க்' எஸ்.எம்.எஸ்., செய்திகளை பரிமாறிக் கொள்ளும் காது கேளாதோர், தகவல்களை தெரிவிக்கும் நிறுவனங்கள், ரயில்வே, விமான விசாரணை தகவல்கள் பாதிக்கப்பட்டன.
பல்க் எஸ்.எம்.எஸ்., என்ற பிரிவிற்குள் கொண்டு வரப்படும் பிரிவினர், யார் யார், யாருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய, முன்வந்த மத்திய உள்துறை அமைச்சகம், அது குறித்து ஆராய, குழு ஒன்றை அமைத்துள்ளது.அந்த குழுவிற்கு, தொலை தொடர்புத்துறை இயக்குனர், ஆர்.சாக்யா அமைப்பாளராக இருப்பார். அதில், தொலை தொடர்புத்துறை, தகவல் தொழில்நுட்பம், உளவுப் பிரிவினர், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் போன்ற அமைப்பினர் இடம்பெற்றிருப்பர்.இந்த உயர்மட்ட குழு, பட்டியல் ஒன்றைத் தயாரித்து, பல்க் எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., குறித்து முடிவு செய்யும். 

Popular Posts