"தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், கேட்கப்படும் கேள்விகள், 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்' என, மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து, பொதுமக்கள், தங்களுக்கு தேவையான தகவல்களைப் பெறுவதற்காக, 2005ம் ஆண்டில், தகவல் அறியும் உரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் அடைந்து வருகின்றனர்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விவரங்கள் கேட்டு, கேள்விகள் சமர்ப்பிக்கும் போது, அந்தக் கேள்விகள், இவ்வளவு வார்த்தைகளில் தான் இருக்க வேண்டும் என, இதுவரை எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது கேள்விகள், 500 வார்த்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என, கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்தியப் பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள், 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். இதில், மத்திய பொது தகவல் அலுவலர் பெயர், முகவரி, விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் இணைப்புக்கள் போன்றவை கணக்கில் எடுப்பதில்லை. இருப்பினும், 500 வார்த்தைகளுக்கு மேல் இருந்தாலும், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படாது.மேலும், மத்திய தகவல் ஆணையரிடம், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்பவர்கள், அவர்களே நேரடியாக ஆஜராக வேண்டும் அல்லது பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும். இல்லையெனில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராகலாம்.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்கப்பட்டு, பதில்கள் தபாலில் அனுப்பப்படும் போது, 50 ரூபாய்க்கு மேல், செலவு ஏற்பட்டால், கூடுதலாகும் தபால் செலவை விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும்.
தகவல்கள் கோரி விண்ணப்பம் செய்வோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர் என்பதற்கான, அரசு வழங்கிய சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும். பிற விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்துடன், 10 ரூபாய்க்கான நீதிமன்ற கட்டண வில்லையை இணைக்க வேண்டும்.இவ்வாறு பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.