திருத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்தேர்வுப் பட்டியல் வெளியீடு

சென்னை:மாறுதலுக்குப் பின், புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் ஆறு பாடங்களுக்கு 1,110 பேரும், தொடக்க கல்வித்துறையில் மூன்று பாடங்களுக்கு 216 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள, 3,665 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, மாநில பதிவுமூப்பு அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்களின் தேர்வுப் பட்டியலை, கடந்த பிப்ரவரி இறுதியில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.



இந்நிலையில், மாநில பதிவு மூப்பில் விடுபட்டவர்களின் பட்டியலை, காலதாமதமாக வேலை வாய்ப்பு இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அளித்தது.இதனால், அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டன. அப்பட்டியலில் இருந்த பலர், தேர்வுப் பட்டியலில் இடம்பெறும் நிலை ஏற்பட்டதால், ஏற்கனவே தயாரித்திருந்த தேர்வுப் பட்டியலை திருத்தி, புதிய பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது. அதன்படி, பாட வாரியாக புதிய பட்டியலை தயாரித்துள்ளது.

முதற்கட்டமாக, பள்ளிக் கல்வித்துறையில், தமிழ், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியில் ஆகிய ஆறு பாடங்களுக்கும், தொடக்க கல்வித்துறையில் இயற்பியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. மீதமுள்ள பாடங்களுக்கு, பின்னர் வெளியிடப்படும் என தெரிகிறது.

பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழில் 210 பேர், இயற்பியலில் 444, தாவரவியலில் 193, விலங்கியலில் 58 மற்றும் புவியியலில் 12 பேர் என மொத்தம் 1,110 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பெயர் விவரங்கள் தேர்வு வாரிய இணையதளத்தில் (தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண)வெளியிடப்பட்டுள்ளன. தொடக்க கல்வித்துறைக்கு, இயற்பியலில் 116 பேர், தாவரவியலில் 50 பேர், விலங்கியலில் 50 பேர் என 216 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறைக்கான ஒதுக்கீட்டில், 29 பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இன சுழற்சிகளில் 131 பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது பணியிடங்கள், கோர்ட் உத்தரவுப்படி, "ரிசர்வ்' செய்யப்பட்டுள்ளன. தொடக்க கல்வித்துறையில், எட்டு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இல்லை என்றும், 9 பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பணியிடம்,"ரிசர்வ்' செய்யப்பட்டுள்ளது.



Popular Posts