பள்ளி மாணவர்கள் செல்லும் பஸ்களில் படம் மற்றும் பாடல்கள் போடுவதை தடுக்க உத்தரவு

பள்ளி மாணவர்கள் செல்லும் அரசு, தனியார் பஸ்களில் படம் ஒளிபரப்புவதையும், பாடல்கள் ஒலிபரப்புவதையும் தடுக்க, கலெக்டர் விவேகானந்தன், போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமூகப் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடந்தது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2012 ன் கீழ் பதிவாகும் வழக்குகளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு, கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் வழங்கப்படும் மறுவாழ்வு நிதியை பெற்றுத்தர உதவிட வேண்டும். ஒவ்வொரு யூனியன் அளவில், குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து வட்டார வள மைய பயிற்றுநர்கள், ஆசிரியர்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலம் மூலம் பயிற்சி அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டவுன் பஸ்களில், பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், முன்பகுதியில் இருக்கைகள் ஒதுக்கித் தரவும், மாணவ, மாணவிகள், பள்ளிக்கு செல்லும் பஸ்களில் படம் ஒளிபரப்புவதையும் மற்றும் பாடல்கள் ஒலிபரப்புவதையும் தடை விதிக்க, போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2012 குறித்து, போலீஸ் துறையில் செயல்படும் சிறப்பு இளைஞர் போலீஸாருக்கும், ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களில் நியமிக்கப்பட்டு குழந்தைகள் நல அலுவலராக பணியாற்றும் போலீஸாருக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.
மாவட்டத்தில், இடையில் நின்ற குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்வது, அனைத்து குழந்தைகள் இல்லங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு விடுதிகளில் குழந்தைகளின் பிரச்னைகளை தெரியப்படுத்த, 24 மணி நேரமும் செயல்படும், கலெக்டரின் நேரடி கட்டணமில்லா தொலைபேசி எண், 1077 என்ற எண்ணையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண், 04342-232234 ஆகிய எண்களை தெளிவாக ஒட்டி வைக்க வேண்டும்.
மக்கள் கூடும் இடங்களான கலெக்டர் அலுவலகம், மருத்துவமனைகள், பள்ளிகள், தாலுகா அலுவலகங்கள், சார்நிலை அலுவலகம் ஆகிய இடங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் ஈடுபடும் நபர்களுக்கு தரப்படும் தண்டனையை, விவரத்துடன், விழிப்புணர்வு பேனர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள, எட்டு யூனியன்களில் செயல்படும் ஒன்றிய குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும், 251 பஞ்சாயத்துகளில் செயல்படும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில், பதிவு பெறாத இல்லங்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் இளஞ்சிறார் நீதிச் சட்டம், 2012 கீழ் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Popular Posts