சிவகாசி:மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தில்<, விபரங்களை அப்டேட் செய்வதில் ,ஆசிரியர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்க, அரசு உத்தரவிட்டது. இதற்கான விபரங்களை ஆசிரியர்கள் சேகரித்து, உதவி தொடக்க கல்வி அலுவலர் மூலம், கல்வித்துறை வெப்சைட்டில், அப்டேட் செய்ய வேண்டும். இதற்காக தனி "பாஸ்வேர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் வசதியுடைய 5 இன்ஜினியரிங் கல்லூரிகளை தேர்வு செய்து, "அப்டேட்' செய்கின்றனர். மற்ற மாவட்டங்களில் இப் பணி விரைவாக நடந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மந்தநிலையில் உள்ளது. 15ம் தேதிக்குள் முடிக்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சிவகாசி ஒன்றியத்தில் இப் பணி மேற்கொள்வதில் தலைமை ஆசிரியர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் சிலர் தனியார் கம்ப்யூட்டர் மையம் மூலம், காத்திருந்து பதிவு செய்கின்றனர். ஒரே நேரத்தில் பலரும் வெப்சைட்டில் பதிவு செய்யும் போது, ஆன்லைன் பதிவில் தாமதம் ஆகிறது. இப் பணியால் பள்ளிகளில் கல்வி பாதிக்கப்படுகிறது.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்களை, இப் பணியை செய்து கொடுக்க, உதவி தொடக்க கல்வி அலுவலர் தாமோதரன் கேட்டுள்ளார். இச் சங்கத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் சிலர், "மாணவர் விபரங்களை கொடுப்பதுதான் எங்கள் கடமை, அதனை வெப் சைட்டில் அப்டேட் செய்வது உதவி தொடக்க கல்வி அலுவலரின் பணி. இப்பணியை தலைமை ஆசிரியர்கள் செய்ய மாட்டோம் என, தெரிவித்தனர். இதனால், மாணவர் விபரங்களை பதிவு செய்வதில் காலதாமதமாகிறது. சிவகாசி ஒன்றியத்தில் இதுவரை 15 ஆயிரம் மாணவர் விபரங்கள் ஏற்றப்பட்டுள்ளன. இன்னும் 10 ஆயிரம் மாணவர் விபரங்கள் "அப்டேட்' செய்ய வேண்டியுள்ளது.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் வைரமுத்து, ""சிவகாசி உதவி தொடக்க கல்வி அலுவலர் தாமோதரன் மொபைலில் பேசும் போது, மாணவர் விபரங்களை விரைவாக முடித்து கொடுங்கள் என்றார். மாநில சங்க முடிவுபடி நாங்கள் இப் பணியை மேற்கொள்ள மாட்டோம் என்றேன். அதற்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கத்தை பற்றி, "சங்கம் மண்ணாங்கட்டி' என தரக்குறைவாக பேசினார். இவரை கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டம் செய்கிறோம்,'' என்றார். உதவி தொடக்க கல்வி அலுவலர், ""ஆசிரியர் வைரமுத்துவிடம் விரைவாக பணியை முடித்து கொடுங்கள் என கூறினேன். வேறு எதுவும் பேச வில்லை,'' என்றார்.நன்றி ! தினமலர்.