ஏ.இ.ஓ., - ஆசிரியர் "கைகலப்பு' சம்பவம்


கடலூர் : உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர் மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி கூறியுள்ளார்.
கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நேற்று முன்தினம் மாலை மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி., தொடக்கப் பள்ளியில் ஏ.இ.ஓ., வீரபாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் ஏ.இ.ஓ., வீரபாண்டியன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் புள்ளி விவரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அ.குறவன்குப்பம் தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் தீனதயாளன் ஏ.இ.ஓ.,விடம் சங்கம் தொடர்பான கோரிக்கை மனுவை கொடுத்து உடனே நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். அதற்கு ஏ.இ.ஓ., தற்போது அவசர வேலை உள்ளதாக கூறி நாளை அலுவலகத்திற்கு வருமாறு கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகார்களின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏ.இ.ஓ., வீரபாண்டியனைத் தாக்கிய பட்டதாரி ஆசிரியர் தீனதயாளன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் 26 பேர் தனியாகவும், கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 100 தலைமை ஆசிரியர்கள் நேற்று கடலூரில் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி சாந்தி, இதுகுறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தினமலர் 18.4.2012

Popular Posts