ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: இடதுசாரிகள் கோரிக்கை - சட்டசபையில் பேச்சு:


சென்னை, ஏப். 18: ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவையில் இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை வைத்தன.  இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதம்:  கே. பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): எந்தெந்தப் பள்ளிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தந்துவிடுகிறேன்.  ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும்போது முழு கல்வித் தகுதி உள்ளவர்களுக்கு கல்வி உரிமைச் சட்டத்தை காரணம் காட்டி மீண்டும் ஒரு தேர்வை திணிப்பது கூடாது.  மத்திய அரசின் நுழைவுத் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் தமிழக அரசு எதிர்த்ததை போலவே இந்த கல்வி உரிமைச் சட்டத்திலும் மீண்டும் ஒரு தேர்வு என்பதை தவிர்த்திட தகுதித் தேர்வை ரத்து செய்ய குரல் கொடுக்க வேண்டும்.  அமைச்சர் என்.ஆர். சிவபதி: உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், ஆசிரியர் நியமனத்திற்கு கட்டாயக் கல்வி சட்டத்தின்படி தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதை ஏற்று இந்த அரசு நடைமுறைப்படுத்துகிறது.  குணசேகரன் (சிபிஐ): ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்துவதைத் தவிர்த்து தனியாகப் பயிற்சி தரலாம். பிறகு பதவி மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதுதான் சரியாக இருக்கும்.  கே. பாலபாரதி (மார்க்சிஸ்ட்): நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும். ஆனால் மற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டைப் போன்று ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கிடையாது. எனவே, அதை கணக்கில் எடுத்து கொண்டுதான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.  நமது மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் நல்ல பயிற்சி தரப்படுகிறது. மேலும், 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு முறையே கிடையாது. அனைவரும் தேர்ச்சியடைந்தவர்கள் என்று அறிவிக்கப்  படுகிறது. இத்தகையை சூழ்நிலையில் 40 வயதைக் கடந்த ஆசிரியர் பயிற்சி முடித்த இளைஞர்கள் வேலை கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ஆனால், இந்த தகுதித் தேர்வு மூலம் அவர்களின் வேலை உரிமை பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய வேதனை குரலை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.  அமைச்சர் சி.வி. சண்முகம்: மற்ற மாநிலங்களிலும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. அந்த மாநிலங்களிலும் இந்த தகுதித் தேர்வை அமல்படுத்த வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் வழிகாட்டியுள்ளது.  அந்த வழிகாட்டுதலை மத்திய அரசு, மாநில அரசுகளுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அதை ஏற்று இந்த அரசு நடைமுறைப்படுத்துகிறது.  கே. பாலகிருஷ்ணன்: உயிரி வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள், இளங்கலைப் பட்டத்துடன் ஆசிரியர் பயிற்சி முடித்த மாணவர்கள் ஆசிரியராகப் பணிபுரிய தகுதியற்றவர்கள் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் என பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே சான்று அளித்துள்ளது.  ஆகவே, ஆசிரியர் தேர்வாணையை உத்தரவை ரத்து செய்து உயிரி வேதியியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாழ்வு அளிக்க வேண்டும்.

Popular Posts