'அரசு பெண் ஊழியருக்கு, முதலில் இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு, மகப்பேறு விடுப்பு அனுமதிக்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை பிரியதர்ஷினி தாக்கல் செய்த மனு: எனது முதல் பிரசவத்திற்காக, கடந்த, 2011ல், 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தேன். எனக்கு, இரட்டை குழந்தை பிறந்தது. இரண்டாவது பிரசவத்திற்காக, கடந்த, 2014, அக்., 12 முதல், 179 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தேன். இதையடுத்து, கடந்த, ஏப்., 10ம் தேதி, பணியில் சேர்ந்தேன்.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,'உங்களுக்கு, ஏற்கனவே இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பில் சென்றதை அனுமதிக்க முடியாது' என்றார். இந்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்து, நீதிபதி எஸ்.வைத்திய நாதன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு, முதல் பிரசவத்திலேயே, இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அதை காரணமாக வைத்து, அடுத்த பிரசவத் திற்கு, மகப்பேறு விடுப்பு அனுமதிக்கமுடியாது என்பது ஏற்புடையதல்ல.மகப்பேறு விடுப்பு, பெண்களின் உடல்நலம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனுமதிக்கப்படுகிறது.
முதலில், இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு, விடுப்பு அனுமதிக்க வேண்டும். சம்பளப் பிடித்தம் உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது. வரும், 23ம் தேதிக்கு, விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.