புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!

தற்பொழுது நடைபெற்றுவரும் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்பொழுது, இரண்டு முக்கியமான துறைகளை அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிட எத்தணித்தது, காங்கிரசு கூட்டணி அரசு. அதிலொன்று, நாடெங்கும் பரவலான எதிர்ப்பைச் சந்தித்த சில்லறை வணிகத் துறை; மற்றொன்று, அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைக் கையாளுவதில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பது. காங்கிரசு கூட்டணி அரசு தனது இந்த இரண்டு முடிவுகளையும் நடைமுறைப்படுத்துவதைச் சற்று தள்ளி வைத்திருக்கிறது. இவை போன்ற சீர்திருத்தங்களைக் கால தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய ஜனநாயகம் தடையாக இருப்பதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புலம்பியிருக்கிறார். தனியார்மயம் பெயரளவிலான ஜனநாயகத்தைக்கூடச் சகித்துக் கொள்வதில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமாக பிரணாப் முகர்ஜியின் புலம்பலை எடுத்துக் கொள்ளலாம்.


சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதை எதிர்ப்பதாக நாடகமாடி வரும் பா.ஜ.க. கும்பல், ஓய்வூதிய நிதித் துறையில் அந்நிய நிறுவனங்கள் நுழைய அனுமதிப்பதை வரவேற்று உள்ளது. மைய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்துவந்த ஓய்வூதியத் துறையைத் தனியார்மயமாக்குவதற்கும், அதில் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதற்கும் ‘பிள்ளையார் சுழி’ போட்டுக் கொடுத்ததே பா.ஜ.க.வின் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் என்பதை இச்சமயத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் நடைமுறை ஆங்கிலேயர்களின் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது. 1935-இல், காலனிய ஆட்சிக் காலத்திலேயே அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பது சட்டபூர்வமாக்கப்பட்டது. 1947க்குப் பின், ஓய்வூதியம் என்பது தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமை என்பதை உறுதிசெய்து, உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. எனினும், ‘சுதந்திர’ இந்தியாவில் இந்திய உழைக்கும் மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் அளிக்கும் கொள்கையோ, சட்டங்களோ நடைமுறையில் இருந்ததே இல்லை. மைய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், ரயில்வே துறை, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய அரசு வங்கி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள் தொழிலாளர்கள் ஆகியோருக்கு மட்டும்தான் ஓய்வூதியம் அளிக்கும் நடைமுறை பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்தது. 1990 களில்தான் அரசு வங்கிகள், எல்.ஐ.சி., பாரத மிகுமின் நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், அவற்றுள் சில நிறுவனங்கள் மட்டும்தான் தமது தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன. ஆனால், அந்நிறுவனங்களின் ஓய்வூதியத் திட்டத்தைச் சட்டபூர்வ உரிமையாகக் கோர முடியாது. சிறுசிறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்களை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் எதுவும் கிடையாது என்பது ஒருபுறமிருக்க, அவர்களுக்கு முதலாளிகள் தம் பங்காக அளிக்க வேண்டிய வருங்கால வைப்பு நிதியைக்கூட முறையாகச் செலுத்துவது கிடையாது. உதிரித் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், கடைச் சிப்பந்திகள் போன்ற அடிமட்டத் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கான எந்தவிதமான சமூக நலத் திட்டங்களும் நடைமுறையில் இருந்ததில்லை. பல கோடிக்கணக்கான இந்திய உழைக்கும் மக்கள் தங்களின் முதுமை காலத்தில் எவ்வித சமூகப் பாதுகாப்பும் அற்ற அவல நிலையில் இன்றும் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் சித்திரம் இதுதான்.



புதிய ஓய்வூதியத் திட்டம் : இருப்பதையும் பறிக்கும் சாத்தான்!

இருப்பதையும் பறிப்பது என்பதையே நோக்கமாகக் கொண்ட தனியார்மய தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி வரும் இந்திய அரசு, ஏற்கெனவே ஓய்வூதியம் பெற்று வரும் அரசு ஊழியர்களிடமிருந்து அந்த உரிமையை 2003 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரேயொரு நிர்வாக உத்தரவின் மூலம் பறித்தது. ஜனவரி 1, 2004 க்குப் பிறகு மைய அரசுப் பதவிகளில் சேரும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. அதற்குப் பதிலாக அந்த ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் 10 சதவீத வருங்கால வைப்பு நிதிக்கு இணையான தொகையை அவர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் மைய அரசு தன் பங்காகச் செலுத்தும் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை பா.ஜ.க.வின் தலைமையிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தது.

எனினும், இப்புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து இந்திய இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு, அவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடரும் எனச் சலுகை காட்டப்பட்டது. தனியார்மயம் என்ற கொள்ளையைப் பாதுகாக்கும் சட்டபூர்வ குண்டர்படைக்கு எஜமானர்கள் வீசியெறிந்துள்ள எலும்புத் துண்டுதான் இந்தச் சலுகை. மைய அரசைப் பின்பற்றி பெரும்பாலான மாநில அரசுகளும் ஜனவரி 1, 2004க்குப் பிறகு சேரும் தமது ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது எனக் கைவிரித்தன.

ஓய்வூதியத் திட்டத்தில் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதியைக் கையாளுவதிலும் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன. அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடமிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் என்ற மைய அரசு நிறுவனத்திடமும், அந்த நிதியை முதலீடு செய்யும் பொறுப்பு இந்திய அரசு வங்கியிடமும் இருந்து வந்தது. இந்நிறுவனங்கள் இந்த நிதியைத் திறம்பட முதலீடு செய்யும் ஆற்றல் கொண்டதாக இல்லை என்ற காரணத்தைக் கூறி, வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்யும் பொறுப்பில் ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் கேபிடல், ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய தனியார் முதலீட்டு நிதி நிறுவனங்களையும் நுழைய அனுமதித்தது, பா.ஜ.க. கூட்டணி அரசு.

இந்தியாவில் ஏறத்தாழ 46 கோடி தொழிலாளர்கள் அமைப்புசாரா துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதோடு ஒப்பிடும்பொழுது அரசுத்துறை மற்றும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றிவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுண்டைக்காய்தான். 2004 ஜூனில் ஆட்சிக்கு வந்த தேசிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்தப் பல கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களையும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இழுத்துப் போடும் நோக்கத்தோடு அத்திட்டத்தை விரிவுபடுத்தி, அதற்குத் தேசிய ஓய்வூதியத் திட்டம் என்ற கவர்ச்சிகரமான பெயரையும் சூட்டியது. மைய மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொள்வது கட்டாயமென்றும், மற்ற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தம் விருப்பப்படி இதில் இணைந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசின் பத்திரங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் மட்டும்தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டது. இதன்படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசு நிறுவனங்கள் மற்றும் பத்திரங்களில் மட்டுமின்றி, பங்குச் சந்தையிலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும் முதலீடு செய்யும் தாராளமயம் சேமநல நிதி நிர்வாகத்தில் புகுத்தப்பட்டது.

இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தைச் சட்டபூர்வமாக்கும் நோக்கத்தோடு, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மசோதாவை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைக்க முயன்று வரும் மன்மோகன் சிங் கும்பல், இன்னொருபுறம் இத்துறையில் தற்பொழுது 26 சதவீத அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிக்கவும்; நாடாளுமன்றத்தின் ஒப்பதலைப் பெறாமலேயே, ஒரு நிர்வாக ஆணை மூலம் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரித்துக் கொள்ளவும்; இத்துறையில் அந்நியக் கூட்டோடு நுழையும் தனியார் நிதி முதலீட்டு நிறுவனங்கள் பல்வேறு விதமான ஓய்வூதியத் திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இவையனைத்தும் நிறைவேறும்பொழுது, தொலைபேசித் துறையில் தனியாரை அனுமதித்த பிறகு அரசின் தொலைபேசி நிறுவனத்திற்கு எந்தக் கதி ஏற்பட்டதோ, அதே போன்ற நிலை தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களையும், அவர்களின் வருங்கால வைப்பு நிதியையும் பாதுகாத்து வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியத்திற்கும் ஏற்படும்.





பற்றாக்குறை என்ற பழைய பல்லவி

மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை வெட்டுவதற்கு என்ன காரணத்தை அரசு முன்வைத்து வருகிறதோ, அதே காரணத்தைத்தான், அதாவது அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது என்பதைத்தான் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுவதற்கும், ஓய்வூதிய நிதித் துறையில் தனியார்மயத்தைப் புகுத்துவதற்கும் காரணமாக அரசு முன்வைத்து வருகிறது. ஆனால், ஆறாவது ஊதியக் கமிசனின் சார்பாக அமைக்கப்பட்ட காயத்ரி கமிட்டி, “மைய அரசினால் வழங்கப்படும் மொத்த ஓய்வூதிய நிதியில் 54 சதவீதம் இராணுவச் சிப்பாய்களுக்கும் அதிகாரிகளுக்கும் செல்லுகிறது. அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும்பொழுது, அரசின் ஓய்வூதியச் செலவு எப்படிக் குறையும்?” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. மேலும், இந்தியாவிலேயே மிகப் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டுள்ள இந்திய ரயில்வே, தனது தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் தனது பட்ஜெட்டிலேயே தனியாக நிதி ஒதுக்கீடு செய்து வரும்பொழுது, அரசிற்கு ஓய்வூதிய நிதிச் செலவு கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்வதற்கு வாய்ப்பில்லை; அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கி வரும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 1960 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதமாக இருந்தது. இது, 200405 இல் 1.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்திவந்தால்கூட, இச்செலவு 202728 இல் 0.54 சதவீதமாகக் குறைந்துவிடும் என்றும் காயத்ரி கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.

எனவே, அரசின் பற்றாக்குறையை குறைப்பது என்பது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கமல்ல. அரசு தனது சட்டபூர்வ பொறுப்பைக் கைகழுவுவதும்; தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புமிக்க வருங்கால வைப்பு நிதியைப் பங்குச் சந்தையில் போட்டுச் சூதாடத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உரிமை அளிப்பதும்தான் இதன் பின்னுள்ள காரணம்.



வருங்கால வைப்பு நிதி சேமிப்பு பறிபோகும் அபாயம்

இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படும் ஒவ்வொரு தொழிலாளியின் சம்பளத்திலிருந்தும் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி தனியார் முதலீட்டு நிறுவனங்களிடம் செலுத்தப்படும். அந்நிறுவனங்கள் இச்சேமிப்பை அரசின் பத்திரங்களில் மட்டுமின்றி, பங்குச் சந்தையிலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும் முதலீடு செய்யும். இதன் மூலம் கிடைக்கும் இலாபமோ/நட்டமோ, அது ஒவ்வொரு தொழிலாளியின் சேமிப்புக் கணக்கிலும் சேர்க்கப்படும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்வது என்பது குறித்து கருத்துக் கூறும் உரிமை தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. புதிய ஓய்வூதியத் திட்டத்திலோ ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் அறிவிக்கும் முதலீட்டுத் திட்டங்களில் ஏதாவதொன்றைத் தொழிலாளி தானே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்; அல்லது, அவர்களின் சார்பில் முதலீட்டு நிறுவனங்களே முதலீடு செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தன்னுடைய ஓய்வூதிய நிதியைக் கொள்ளையிடும் உரிமையை எந்த முதலாளிக்கு வழங்குவது என்று தீர்மானிக்கும் உரிமை தொழிலாளிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளையிலிருந்து தப்பிக்கும் உரிமையோ, தனது ஓய்வூதிய நிதியை வேறுவிதமாகப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையோ தொழிலாளிக்கு கிடையாது.

இலாபம் கிடைத்தாலும், நட்டமடைந்தாலும், ஒவ்வொரு தொழிலாளியும், தான் ஓய்வு பெறும் வரை மாதாந்திர நிதியைச் செலுத்திக் கொண்டேயிருக்க வேண்டுமே தவிர, இத்திட்டத்திலிருந்து விலகிச் சென்றுவிட முடியாது. திட்டத்திலிருந்து விலகுவது மட்டுமல்ல, ஒருவர் தனக்குத் தேவைப்படும் நேரத்தில் தனது வருங்கால வைப்பு நிதி சேமிப்பிலிருந்து பணத்தை எடுப்பதுகூட அவ்வளவு எளிதான விவகாரமல்ல. மேலும், ஒரு தொழிலாளி வேலையிழந்து, அதனால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய சந்தா தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் அவரின் சேமிப்பு முழுவதையும் கம்பெனியே முழுங்கிவிடும் அபாயமும் இத்திட்டத்தில் உள்ளது.

தொழிலாளர்கள் ஓய்வுபெறும்பொழுது, அவர்களின் சேமிப்பு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஈட்டித் தந்திருக்கும் வருமானத்திலிருந்து 60 சதவீதம் மொத்தமாகத் திருப்பித் தரப்படும்; மீதி 40 சதவீதம் அவர்களுக்குக் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்காக காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். அதேசமயம், ஒரு தொழிலாளி தான் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இத்திட்டத்திலிருந்து விலகிக் கொள்ள நேர்ந்தால், அவரது சேமிப்பிலிருந்து 80 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். இந்தக் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் என்பது சந்தை நிலவரத்தைப் பொறுத்து மாறக்கூடியதே தவிர, உத்தரவாதமானது அல்ல. சந்தை நிலவரம் குறைந்தபட்ச ஓய்வூதியம் தரக்கூடிய நிலையில் இல்லை என்றால், ஓவ்வொரு தொழிலாளியும் தனக்குக் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் அளிப்பதற்காகப் பிடிக்கப்படும் முதலீட்டை அதிகரித்துக் கொண்டே செல்ல நேரிடும்.

இவையெல்லாம், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களைச் சந்திக்காமல் நிதானமாக வளர்ந்து கொண்டிருந்தால்தான் கைக்குக் கிட்டும். பங்குச் சந்தை தலைகுப்புறக் கவிழ்ந்துவிட்டாலோ, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்ட தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதி கடலில் கரைத்த பெருங்காயமாகக் காணாமல் போகும். இப்படிப்பட்ட அபாயம் நடக்குமா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. இப்படி நடப்பது தவிர்க்க முடியாதது என்பதைத்தான் முதலாளித்துவத்தின் குருபீடமான அமெரிக்காவின் அனுபவங்கள் நிரூபித்திருக்கின்றன.

அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தையில் கொட்டியதால், 1980க்கும் 2007க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்கப் பங்குச் சந்தை எக்குத்தப்பாக வீங்கியது. இந்த வீக்கத்தால், தொழிலாளி வர்க்கத்தைவிட, வேலியிடப்பட்ட நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் தரகு நிறுவனங்கள் போன்றவைதான் பலனடைந்தன. குறிப்பாக, தனியார் முதலீட்டு நிறுவனங்கள் மட்டும் 2000 க்குப் பிந்தைய பத்து ஆண்டுகளுக்குள் ஓய்வூதிய நிதியைப் பயன்படுத்தி 1,700 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக (85,000 கோடி ரூபாய்) இலாபம் ஈட்டின. சப் பிரைம் நெருக்கடியால் அமெரிக்கப் பங்குச் சந்தையின் வீக்கம் வெடித்தபொழுது, ஏறத்தாழ 3 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (ஒரு கோடியே ஐம்பது இலட்சம் கோடி ரூபாய்) பெறுமானமுள்ள அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின், நடுத்தர வர்க்கத்தின் ஓய்வூதியச் சேமிப்பு சுவடே தெரியாமல் மறைந்து போனது.

இது போன்ற நிலைமை இந்தியாவிலும் உருவாகும் என்பதை எதிர்பார்க்கும் ஆளும் கும்பல், அதற்கேற்றபடியே புதிய ஓய்வூதியச் சட்டத்தில், “தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியம் வழங்க முடியாது; சந்தையில் திடீர் இழப்புகள் ஏற்பட்டால், சேமிப்புத் தொகையில் ஒரு சிறு பகுதியைத் திருப்பித் தருவதற்குக்கூட உத்தரவாதம் தர முடியாது” என நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து வருங்கால வைப்பு நிதியைப் பிடித்தம் செய்து, அதனை அரசிடம் கட்டாமல், அந்நிதியில் பல்வேறு முறைகேடுகளையும் கையாடல்களையும் தனியார் முதலாளிகள் செய்துவருவது ஏற்கெனவே அம்பலமாகிப் போன உண்மை. இனி இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகளும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்படுவதற்கான வாய்ப்பை இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டம் திறந்துவிட்டுள்ளது.

இத்தனியார் முதலீட்டு நிறுவனங்கள் கணக்கு வழக்குகளை ஒழுங்காக வைத்திருப்பார்களா, தொழிலாளர்கள் ஓய்வு பெறும்பொழுது அவர்களின் சேமிப்பை முறையாகத் திரும்ப ஒப்படைப்பார்களா எனக் கேட்டால், அவர்களைக் கண்காணிப்பதற்குத்தான் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். வேலிக்கு ஓணாண் சாட்சியாம். தொலை தொடர்புத் துறையிலும் காப்பீடு துறையிலும் மின் துறையிலும் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்காற்று ஆணையங்கள் அத்துறைகளில் நுழைந்துள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையைச் சட்டபூர்வமாக்கும் திருப்பணியைத்தான் செய்து வருகின்றன. ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியை ஒரு இருபது, முப்பது ஆண்டுகளுக்குத் தானே வைத்துக் கொண்டு, தமது விருப்பம் போலப் பயன்படுத்திக் கொள்ளத் தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பதை, 2 ஜி ஐ விஞ்சும் ஊழலாகத்தான் சொல்ல முடியும்.





ஓய்வூதியம்: முதலாளியின் கொடையா, தொழிலாளியின் உரிமையா?

அரசும் முதலாளிகளும் தமது ஊழியர்களுக்கு வழங்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பிற பணச் சலுகைகளை, தாங்கள் மனமுவந்து அளிக்கும் கொடையாக, தங்களின் இலாபத்தின் ஒரு பகுதியைத் தொழிலாளர்களுக்குத் தருவதாகக் காட்டிக் கொள்கிறார்கள். இதன் காரணமாகவே, அரசும் முதலாளிகளும் தங்களுக்கு ஏற்படும் பற்றாக்குறை அல்லது நட்டம் போன்ற காரணங்களைக் காட்டி, தொழிலாளிகள் போராடி பெற்ற இந்த உரிமைகளைப் பறித்துவிட முயலுகிறார்கள்.

ஒரு தொழிற்சாலையிலோ அல்லது அலுவலகத்திலோ எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் என வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு, முதலாளிகள் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் முழு உழைப்புச் சக்திக்கு உரிய கூலியை ஒருபோதும் தருவதில்லை. தொழிலாளிகள் வாழ்வதற்குப் போதுமான, அதாவது தொழிலாளி வர்க்கம் தம்மை மறுஉற்பத்தி செய்து கொள்ளுவதற்கு எவ்வளவு தேவைப்படுமோ, அதனை மட்டுமே கூலியாகத் தருகிறார்கள். ஒரு தொழிற்சாலையில் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளி தன்னை மறு உற்பத்தி செய்து கொள்வதற்கு தேவையான கூலியை இரண்டு மணி நேர உழைப்பின் மூலம் பெற்றுவிட முடியும் என்றால், மீதி ஆறு மணி நேரமும் அத்தொழிலாளி இலவசமாக முதலாளிக்குத் தனது உழைப்புச் சக்தியை வழங்குமாறு நிர்பந்திக்கப்படுகிறார். முதலாளிக்குக் கிடைக்கும் இலாபம், நில வாடகை, வரிகள் இத்தியாதி என்னும் எல்லாவிதமான உபரி மதிப்பும் கூலி கொடுக்கப்படாத இந்த உழைப்பிலிருந்துதான் முதலாளி பெற்றுக் கொள்கிறான் என மார்க்ஸ் முதலாளித்துவச் சுரண்டலின் பின்னுள்ள இந்த இரகசியத்தை நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே அம்பலப்படுத்தியிருக்கிறார்.

எனவே, ஓய்வூதியம் என்பது தொழிலாளிகளுக்குத் தரப்படும் தானமல்ல. அது அவனிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்ட கொடுபடா கூலியின் ஒரு பகுதிதான். இதனைத் தர மறுப்பதென்பது முதலாளித்துவப் பயங்கரவாதம்தான். புதிய ஓய்வூதியச் சட்டத்தைக் கொண்டு வந்து அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய உரிமையைப் பறித்ததன் மூலம், தனியார் கார்ப்பரேட் முதலாளிகளும் இன்ன பிற முதலாளிகளும் தொழிலாளிகளுக்கு ஓய்வூதியம் கொடுக்கும் சட்டபூர்வமான பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது, மன்மோகன் சிங் கும்பல். ஓடிஓடித் தேய்ந்து போன இயந்திரங்களைக் கழித்துக் கட்டிக் குப்பையில் வீசியெறிவது போல, உழைத்து உழைத்து இளைத்துப் போகும் தொழிலாளர்களை, அவர்களின் முதுமைக் காலத்தில் எவ்விதச் சமூகப் பாதுகாப்பும் அற்ற நிர்க்கதியான நிலையில், அபாயத்தில் தள்ளிவிடும் முதலா ளித்துவ வக்கிரம்தான் இப்புதிய ஓய்வூதியத் திட்டம்.

போலி கம்யூனிஸ்டுகள் தவிர்த்த பிற எதிர்க்கட்சிகள் அனைத்தும் இப்புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக வாயளவில்கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. போலி கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்போ நாடாளுமன்றம் என்ற நான்கு சுவற்றுக்குள்ளேயே முடங்கிவிட்டது. நாடெங்குமுள்ள அக்கட்சிகளின் தொழிற்சங்கங்களோ ஆலை வாயிலில் ஒழிக கோஷம் போடுவதற்கு அப்பால் தாண்டிச் செல்லவில்லை. இந்த சம்பிரதாயமான எதிர்ப்புகளால் தனியார்மயம் தாராளமயத்தை வீழ்த்த முடியாது என்பதை கடந்த இருபது ஆண்டு கால அனுபவம் உணர்த்தியிருக்கிறது. எனவே, தொழிலாளி வர்க்கம் ஒரே அணியாகத் திரண்டு போலிகளின் இந்தச் சடங்குத்தனமான எதிர்ப்பை மீறி, சம்பிரதாயமான, சட்டத்திற்கு உட்பட்ட போராட்ட முறைகளை மீறிப் போராடினால் மட்டுமே, புதிய ஓய்வூதியத் திட்டம் என்ற இந்த முதலாளித்துவப் பயங்கரவாதத்தைத் துரத்தியடிக்க முடியும்.

_______________________________________

- புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

Popular Posts