தமிழ்நாட்டில் தொடக்ககல்வித்துறையின் கீழ் சுமார் 44,000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 30இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளும், கிரமாப் பகுதிகளை சார்ந்த குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.
அரசாங்கம் இந்தாண்டு சுகாதரமான வாழ்க்கையை அனைவரும் பெற வேண்டும் என்ற குறிக்கோளை அடைய முயற்சி செய்து வருகிறது. இதற்காக கிரமங்களில் வீடுதோறும் கழிப்பிடம் மற்றும் பள்ளிகள் அனைத்தும் முழுமையான கழிப்பிட வசதியை பெற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. திட்டத்தை தீட்டும் அரசாங்கம் அதை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க தவறுவதால் திட்டத்தின் பலன் முழுமையாக கிடைப்பதில் இடர்பாடு ஏற்படுகிறது.
பள்ளிகளில் கழிப்பிடம் அமைப்பதில் முனைப்பு காட்டும் அரசாங்கம் அதை
சுகாதரமாக பராமரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பள்ளிகளில்
படிக்கும் மாணவர்கள் திறந்தவெளி கழிப்பிடத்தையே நாட வேண்டியுள்ளது. இது
குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர்
முத்துப்பாண்டியன் தமிழக அரசிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்
கூறியுள்ளதாவது
சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் சுமார் 1175 அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில்
கிட்டதட்ட 67,000 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் பல
பள்ளிகள் முழுமையான கழிப்பிட வசதியும், சுத்தமான குடிநீர் வசதியும் இன்றி
செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ்
ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை இந்தாண்டு முழுமையாக கழிப்பிடம் வசதியை
மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என கல்வித்துறை அனைத்து
தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கழிப்பிடத்தை தொடர்ந்து
பராமரிக்க எவ்வித திட்டமும் இல்லாததால் பள்ளிகளின் கழிப்பிடங்கள்
சுகாதரமற்ற இடமாக மாறும் சூழல் உள்ளது. கழிப்பிடங்களை சுத்தம் செய்ய
ஊராட்சியின் துப்புரவு பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள கல்வித்துறை
உத்தரவிட்டாலும் அதற்கான ஒத்துழைப்பை ஊராட்சி மன்றத் தலைவர்கள்
வழங்குவதில்லை. இதனால் கழிப்பிடங்களை சுத்தம் செய்ய இயலாமல்
தலைமையாசிரியர்கள் அவதியுறுகின்றனர்.
எனவே அரசாங்கம் மாணவர்களின் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் கிடைக்கவும், அருகாமை பள்ளிகளை இணைத்து குறைந்தபட்சம் ஒரு துப்புரவு பணியாளரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் விலை உயர்ந்த கணினி உபகரணங்கள் இருப்பதால் அதை பாதுகாக்க இரவு காவலரை சுழற்சி அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்கள் அமைப்பின் சார்பாக கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம்.